Friday, May 17, 2019

சு. வெங்கடேசனின் வேள்பாரி

தமிழில் எழுதும் முயற்சி, வெகு நாட்களுக்கு பிறகு.

வீரநாயகன் வேள்பாரி ஆனந்த விகடனில் தொடராக வந்த மிகவும் பரபரப்பாக பேசப் பட்ட நாவல். சமீபத்தில் புத்தக வடிவில் வெளியிடப்பட்டுள்ளது. நான்கு பாகங்கள் இரண்டு புத்தகங்களாக வந்துள்ளன.

இதற்கு முன்பு சு. வெங்கடேசனின் காவல் கோட்டம் நாவல் பாதி வரைக்கும் படித்தேன். அப்புத்தகத்தின்  ஆழத்தையும்  பரப்பையும் அனுபவிப்பதற்கு  மிகுந்த பொறுமை வேண்டும். அது அந்த சமயத்தில் என்னிடம் இல்லை. வேள்பாரி படித்த பிறகு காவல் கோட்டம் மீது மற்றொரு முயற்சி எடுப்பேன் என்று நம்புகிறேன்.

பாரி நாம் பள்ளியில் படித்த முல்லைக்கு கொடியாக தனது தேரைக்  கொடை கொடுத்த அதே வள்ளல் தான். கதை எழுதப்பட்ட காலத்தில் காடு, மலை நிலங்களில் வாழும் வேளிர் குலங்களின் வாழ்க்கை முறை மூவேந்த்தர் நாட்டு மக்களின் வாழ்க்கை முறைக்கு முற்றிலும் வேறாக சித்தரிக்கப் பட்டுள்ளது. அவ்வேளிர் குலங்களுக்குள் பறம்பு நாட்டுக்குலத்தின் தலைவன்  பாரி. வேளிர் மக்களின் வாழ்க்கை இயற்கையோடு ஒன்றி இருக்கிறது. அவர்கள் விவசாயம், வணிகம் ஆகியவற்றில் ஈடுபடடுவதில்லை. வன விலங்கு மாமிசம், பழ கிழங்கு வகைகளே அவர்களுக்கு  உணவாகும். 

கதையின் முதல் பாதி மிகவும் மெதுவாகவே நகர்கிறது. சங்கப் புலவர் கபிலர், பாரியின் பெருமைகைளைப் பற்றிக் கேள்விப்பட்டு அவற்றை நேரில் காண பறம்பு நாட்டுக்குச்  செல்கிறார். அவருடைய கண்களின் மூலம் பறம்பு நாட்டின் வாழ்க்கை முறையைக் காண்கிறோம்.  பாரியைத் தவிர, குல ஆசான் தேக்கன்,  மாவீரன் நீலன் போன்ற கதாபாத்திரங்களும் நமக்கு அறிமுகம் செய்யப்படுகின்றனர். பாண்டிய நாட்டில் இளவரசன் பொதிய வெற்பனுக்கும், பெருவணிகர் குலத்து மங்கை  பொற்சுவைக்கும் திருமண ஏற்பாடுகள் மதுரையில் நடக்கின்றன. தற்செயலாக தேவாங்கு எனும் பறம்பு நாட்டு விலங்கு ஒன்றின் விசித்திரமான குணம் ஒன்று பாண்டிய நாட்டுத்  தலைவர்களுக்குத்  தெரிய வருகிறது. கப்பல் பயணம் மற்றும் வணிகத்துக்கு  அக்குணத்தின் முக்கியத்துவம் பறம்பு நாட்டின் மேல் தாக்குதல் செய்ய சாக்காக அமைகிறது. 

காதல், காமம் முதற்கொண்டு வானியல், அரசியல், போர் என்று எல்லாவற்றிலும் வெங்கடேசனின்  தனிப்பட்ட நடை, ஆழம், யதார்த்தத்தோடு மிளிர்கின்றது.  

கதையில் வரும் எண்ணற்ற கதா பாத்திரங்களில் என்னைக் கவர்ந்த இரண்டு பேர் -  பாண்டிய நாட்டு ஆஸ்தான வானியல் நிபுணர் (கணியர்) திசை வேழரும், மேலே குறிப்பிட்ட பொற்சுவையும் தான். இரண்டாம் பாதியில் நடைபெறும் பெரும் போரில் பாண்டியர் தரப்பில் நடுவராக (கோள்சொல்லி என்று அழைக்கப்படும்) திசை வேழர் தயக்கத்துடன் ஆற்றும் பணி இக்கதையின் மிகவும் அருமையான ஒரு உபகதையாகஅமைந்துள்ளது. பொற்சுவையோ வெகு சில பக்கங்களே வந்தாலும்  தனது அறிவு, கலை ரசனை, தியாகம் மற்றும் மகத்தான செயல்களால் படிப்பவர் உள்ளத்தில் இடம் பிடிக்கின்றாள்.  

வெங்கடேசனின் போர்ச் சித்தரிப்பு இரண்டாம் பாதியின் தலையம்சம். மிகவும் சிறிய படையுடன் பறம்பு நாட்டுப் படையினரின்  போர்த் தந்திரங்களும், இயற்கையைத் தங்களுக்கு அனுகூலமாக எப்படி பயன்படுத்துகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கன. போரில் பயன்படுத்தும் ஒவ்வொரு ஆயுதத்திலும் பறம்பு நாட்டினரின்  (வாட்களை கூறு செய்யும் சிறப்புக் கல் முதல் முயல் இரத்தத்தில் தோய்த்த வில்லின்  நாண்  வரை) மேலாண்மை தெரிகிறது. ஆனால் சில இடங்களில் இது கொஞ்சம் அதிகம் என்றே  தோன்ற வைக்கின்றது. 

பாரியின் சிறப்புகளை அவனது செய்கைகளைவிட அவனது தளபதிகள், வீரர்கள், கபிலர் ஆகியோர் அவன் மீது காட்டும் மதிப்பு, விசுவாசம் மூலமாக சித்தரிப்பது ரசிக்கக் கூடிய அம்சம்.  

ஒரு சின்ன நெருடல் - நாம் பெருமையுடன் நோக்கும் தமிழ் மூவேந்தர்களும் வில்லர்களாக வருகின்றனர். அவர்களில் ஒருவரை மையமாக வைத்து கூடிய சீக்கிரத்தில் இன்னொரு நாவலை வெங்கடேசன் நமக்குப் படைப்பார் என்று நம்புகிறேன். 

இரா. பாலாஜி 








2 comments:

  1. நல்லதொரு பதிவு. வேள்பாரியை நோக்கி தள்ளும் படி, சில விஷயங்களைக் கோடுஇட்டு காட்டி நல்லதொரு ஆவலை ஏற்படுத்தி உள்ளீர்கள். 'தேவாங்குக்கும், கப்பலுக்கும் என்ன சம்பந்தம்?', 'வேளிர் மக்களின் வாழ்வு முறை, இன்றும் எங்கோ தொடர்கிறதா?", "பொற்சுவை முக்கிய கதாப்பாத்திரம் எனில், பாரியைப் பற்றிய கதையில் பாண்டிய நாடு வணிகக் குடும்பப் பெண்ணிற்கு என்ன பங்கு?" - இப்படியான கேள்விகள் நிச்சயம் வேள் பாரியை நோக்கித் தள்ளும்.

    உலகு எங்கிலும் நாம் காணும் கூறு, பண்பட்டதாகக் கருதப் படும் ஒரு இனம், தன்னிறைவாக, இயற்கையோடு இயைந்து வாழும் ஒரு இனத்தினைத் தாக்கி, அவர்களின் வாழ்வியல் முறையை அழித்தொழிப்பது. தென்னமெரிக்க பூர்வகுடிகளை ஸ்பானிய பேரரசு படைகள் அழித்தது, அமெரிக்க ஆப்ரிக்க இனங்களை, ஐரோப்பிய குழுக்கள் தாக்கியது அனைத்தும் இதில் சேர்த்தி. ஏன், அவதார் படம் கூட இந்தக் கதைதானே! பறம்பு நாட்டில் மீது படை எடுக்கும் மூவேந்தர்களும், இதே வரலாற்றின் பாத்திரங்கள்தானோ?

    பொருளியல் படிநிலையிலும், பறம்பு நாட்டினரை விட மூவேந்தர்கள் சில கட்டங்கள் மேலே உள்ளனர். மூவேந்தர்களின் நாடு நிலவுடைமைச் சமுதாயத்தைக் கொண்டு உள்ளது, பறம்போ பழங்குடிகளின் சமுதாயத்தை ஒத்து உள்ளது. இந்நிலையில், போரின் மூலம் போரின் ஒரு தரப்பு அடைய நினைப்பது எது என்ற கேள்வி மேலெழுகிறது. (இரண்டாம் உலகப் போரின் போது, அமெரிக்கா எதற்காக போரில் பங்கேற்கிறது என்பதை மக்களிடம் நிறுவ அமெரிக்க ஆட்சியாளர்களுக்கு கட்டாயம் இருந்ததாகவும், ஆங்கிலேய, பிரெஞ்சு அரசுகள், அவர்களது பேரரசை காக்க முற்பட, அமெரிக்கா மத்திய ஆசிய, ஆப்பிரிக்க மக்களின் அமைதிக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் என்று நிறுவியதாகவும் வாசித்திருக்கிறேன்) மூவேந்தர்களுக்கு அந்தப் போர் பேராசையின் விழைவு, பறம்பினருக்கோ ஜீவித்து இருத்தலின் கட்டாயம். இயல்பாக நாம் பாரியின் பக்கம் தானே நிற்போம்.

    இப்பதிவிற்கு நன்றி..

    தொடர்ந்து புத்தகங்களை அறிமுகப் படுத்தியும், உரையாடியும் நற்சேவை புரிவீராக :)
    -ப. செந்தில் ஆனந்த்

    ReplyDelete
  2. நன்றி செந்தில். ஆம், எனக்கும் வேள்பாரி படிக்கும் போது அவதார் ஞாபகம் வந்தது.

    ReplyDelete

Keezhadi Museum

 Around 2015, the Archaeological Survey of India (ASI) made an exciting new archaeological discovery  south-east of Madurai in the Keezhadi ...